Monday, December 28, 2015

வாரணம் ஆயிரம்

   ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
 வாரணமாயிரம்


ஸ்ரீ ஆண்டாள் தான் கண்ட ஒரு அற்புதக் கனவினைத் தன் தோழிக்கு விவரிப்பதுவே , அவர் வாய் மொழி அருளிச் செய்த 'நாச்சியார் திருமொழி'யின் ஒரு பகுதியான 'வாரணமாயிரம்'!  ஆண்டாள் என்று பெயர் பெற்ற கோதை நாச்சியாரின் பிறவிப்பயனே ஸ்ரீ ரங்கனை மணப்பதுதான் ! அல்லும் பகலும் அரங்கன் நினைவன்றி வேறொன்றும் அறியாத ஆண்டாளின் பக்தி அளவிடற்கரியது!  மனதை விட்டகலாத  நினைவுகளாய் அவளது கனவுகள் தொடர்ந்தன ! மணவினைகள் அனைத்தையும் கனவில் கண்ட ஆண்டாள் அதனை அழகுற விவரிக்கிறாள் தன் தோழிக்கு!  நாச்சியாரின் திருமொழியில் தமிழ்மொழியின் அழகு உள்ளங்கை நெல்லிக்கனியாய் மணக்கிறது! அந்த அழகை நாமும் இங்கே சுவைத்து மகிழ்வோம் வாருங்கள்  !
வாரணமாயிரம் பத்து பாடல்களையும் அழகாக இசைத்திருக்கிறார் N.C.Soundaravalli அவர்கள். பாடலைக் கேட்டுக்கொண்டே படிக்கலாம்: இதோ கேளுங்கள் அதனை : https://www.youtube.com/watch?v=LH_I-wAzLfg

 வாரணமாயிரம் - 1

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து 
நாரண  நம்பி  நடக்கின்றான்  என்றெதிர் 
பூரண  பொற்குடம்  வைத்து  புறமெங்கும் 
தோரணம்நாட்டக்  கனாக் கண்டேன்  தோழி நான் !



"தானே ஒரு யானையின் அழகும் கம்பீரமும் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், மணமகனாக அலங்கரிக்கப்பட்டு , ஆயிரம் யானைகள் புடைசூழ வலம் வருகின்றான்  ! அவனது அழகிய நடையையும் உருவத்தையும் கண்டு வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர் அனைவரும். அத்தகைய அந்தமிகு மணமகனை வரவேற்கப் புறப்படுகின்றனர் எனது  தந்தையாராகிய பெரியாழ்வாரும் அவரது சுற்றத்தினரும்! பொன்னாலாகிய குடங்களில் தேங்காயும் மாவிலையும் வைத்து, அந்தக் கலசங்களைக் கைகளிலேந்தியபடி , ஆன்றோர்கள் மந்திரம் உரைக்க மணமகனை எதிர்கொண்டு வரவேற்கின்றனர் ! வரவேற்பின் ஒரு பகுதியாக ஊரெங்கும்  தோரணங்கள் கட்டி உறவினர் அனைவரும் கூடி அந்தமிகு அரங்கனை ஆசையுடன் வரவேற்கின்றனர் ! தோழி, இது நான் கண்ட கனவு" என்று எடுத்துரைக்கின்றாள் கோதை !


                                                          வாரணமாயிரம் - 2 

நாளை வதுவை மணமென்று நாளிட்டு  
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்  
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்  
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழிநான் !



கனவின் தொடர்ச்சியைக் கூறுகிறாள் கோதை தன் தோழிக்கு !  பூரணகும்ப வரவேற்பைத் தொடர்ந்து அந்தமிகு அரங்கன், அடைந்துவிட்டான் மணி மண்டபத்தை ! பெரியோர்கள் அனைவரும் கூடியிருந்து நிச்சயதார்த்த விழாவினை நடத்தத் தொடங்குகின்றனர்.  இன்னாருக்கு இன்னாரை இன்ன நாளில் இன்ன இடத்தில் மணம் செய்விக்கப் போகிறோம் என்று அறுதியிட்டுக் கூறும் விழாவே நிச்சயதார்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாக்கு மரமும் அதன் பட்டைகளும், முத்து மணிகளும் மலர்களும் கொண்டு சீராக அலங்கரிக்கப்பட்டுள்ளது மணமண்டபம். அடுத்த நாளே திருமணத்திற்குரிய பொன்னாள் என்று நிச்சயிக்கப் படுகிறது. மாசு மறுவற்ற மணமகன்,  மாதவன், கோவிந்தன் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்ற ஒரு சிங்கமொத்த அழகுள்ள  ஸ்ரீ கிருஷ்ணன் - , ஒரு வலுவான காளை உள்ளே புகுந்ததைப்போல்   அந்த மணி மண்டபத்திற்குள்  புகுந்ததைத்  தான் கனவில் கண்டதாகக் கூறுகிறாள் கோதை தன் தோழியிடம். ('காளை புகுதக் கனாக் கண்டேன்' - விவரிக்க இயலாத அழகுள்ள தமிழ் இங்கே உணர்வு பூர்வமாக உறவாடுகிற பாங்கைப் பாருங்கள் !)  இந்த ஒரு கண்ணிக்கு  மட்டுமான காணொளியை கீழே காணுங்கள் ! பாடியவர்கள் பம்பாய் சகோதரியர் !



                                   
                                                            வாரணமாயிரம் - 3

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து 
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை 
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழிநான் !



இந்திரன் முதலாய முப்பத்து முக்கோடி தேவர் குழாமும் தமது தலைவனாம் திருநாரணனின் திருமண வைபவத்திற்கு ஒன்று கூடுகின்றனர். மணமகனின் சார்பாக இவர்கள் அனைவரும் பெண் கேட்டு வந்து , கோதையை மணம் பேசி முடிக்கின்றனர். திருமண வைபவத்தை நாள் கடத்தாமல் அடுத்த நாளே வைப்பது என்பது முடிவாகிறது. திருமண வைபவம்  பரந்தாமனுடையதாயிற்றே! எனவே திருமணத்தை நடத்த வேண்டிய முறைகளைப்பற்றியும் கோலாகலமான அந்த விழாவைக் கொண்டாடும் விதங்களைப் பற்றியும் இருவீட்டாரும் கலந்து பேசி இனிய முடிவுக்கு வருகின்றனர். மணவினைகள் துரிதமாக நடைபெறுகின்றன. வேதமுறைப்படி மந்திரங்கள் ஒலிக்க, மாதர்கள் இசை பாட வைபவம் தொடங்குகிறது. இவளே மணப்பெண் என்று அறுதியிடும் விதமாக நாத்தி ஸ்ரீதுர்கை மணப்பெண்ணுக்குப்  பூச்சூட்டி மணமாலைகளால்  அலங்கரிக்கிறாள். மந்திரக்கோடி அல்லது கூறைப்புடவை என்று சொல்லப்படுகின்ற புடவையை மணப்பெண்ணுக்கு வழங்கி, அதனை உடுத்திவைத்து மணமேடைக்கு அழைத்து வருகிறார்கள். இந்த விவரங்கள் அனைத்தையும் கனவில் கண்டதாகத் தோழியிடம் கூறுகிறாள் கோதை. அவள் விளக்கும் பாங்கையும் இங்கே பாருங்கள் அவள் வாக்குகளில் :
    இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
    வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
    மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
    அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழிநான் !

"இந்திரன் முதலாய தேவர்கள் அனைவரும் வந்து, என்னை நாரணனுக்கு மணம் பேசி,மந்திரங்கள் ஒலிக்க மந்திரக் கோடி உடுத்தவைத்து, எனது நாத்தி எனக்கு மணமாலை சூட்டும் திருக்காட்சியைக் கனவில் நான் கண்டேன் தோழி" என்கிறாள் கோதை, இந்த எளிமையான, எனில் ஏற்றமிகு தமிழில் !


வாரணமாயிரம் - 4

நாற்றிசை தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி 
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்தன்னை 
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழிநான் !


தொடர்கிறாள் கோதை :"பூவுலகின் நாற்புறங்களி லிருந்தும் புண்ணிய நதிகளின் நீர் கொண்டுவரப்பட்டன ! வேதமறிந்த பிராமணர்கள் மந்திரமோதினார்கள் . உதகசாந்தி மந்திரம் என்று சொல்லப்படுகின்ற அம மந்திரங்களால் மேலும் புனிதமாக்கப்பட்ட அந்த நீர் எம்மேல் தெளிக்கப்பட்டது. மலர்மாலைகளால் அழகுக்கு அழகு செய்யப்பட்ட அனங்கனொத்த அழகனாகிய அனந்தன் நிற்கிறான் என்னருகே ! மறையோதி மந்திரங்களால் பூஜிக்கப்பட்ட காப்பு நாண் எம்மிருவர் கைகளிலும் கட்டப்பட்டாற்போல் கனாக் கண்டேன் தோழி நான் !" என்று தான் கண்ட கனவின் ஒரு பகுதியை உரைக்கிறாள் கோதை !

 வாரணமாயிரம் - 4

நாற்றிசை தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத் தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்தன்னை
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழிநான் !

தொடர்கிறாள் கோதை :"பூவுலகின் நாற்புறங்களி லிருந்தும் புண்ணிய நதிகளின் நீர் கொண்டுவரப்பட்டன ! வேதமறிந்த பிராமணர்கள் மந்திரமோதினார்கள் . உதகசாந்தி மந்திரம் என்று சொல்லப்படுகின்ற அம மந்திரங்களால் மேலும் புனிதமாக்கப்பட்ட அந்த நீர் எம்மேல் தெளிக்கப்பட்டது. மலர்மாலைகளால் அழகுக்கு அழகு செய்யப்பட்ட அனங்கனொத்த அழகனாகிய அனந்தன் நிற்கிறான் என்னருகே ! மறையோதி மந்திரங்களால் பூஜிக்கப்பட்ட காப்பு நாண் எம்மிருவர் கைகளிலும் கட்டப்பட்டாற்போல் கனாக் கண்டேன் தோழி நான் !" என்று தான் கண்ட கனவின் ஒரு பகுதியை உரைக்கிறாள் கோதை !

இந்தப் புண்ணியனைத் தொழுவதால் பெறும் புண்ணியத்தை  விடவும் ஒரு புண்ணியமா அந்த நதிகளின் நீரில் ? அழகுக்கே பொருள் சொல்லும் அந்த அனந்தனுக்கு அழகு செய்யப் பூக்களா ? மறைகளே தானாகி நிற்கின்ற அவனுக்கு மறையோதி மந்திரமா?  காக்கும் கடவுளாகிய கண்ணனுக்கும் கையில் கட்ட ஒரு காப்பா? இத்தனையும் அறிந்தவள்தான் அந்தக் கோதை  !  இருப்பினும் பெண்ணல்லவா ! மணவினைச் சடங்குகள் அவளுக்கு மட்டும் மறுக்கப்பட வேண்டுமா என்ன ? விடுவானா கண்ணன்? வந்தான் கனவில் ! நடத்தித் தந்தான் நனவில் !


வாரணமாயிரம் - 5

   கதிரொளி தீபம் கலசமுட னேந்தி
   சதிரிள மங்கையர் தாம்வந்தெதிர்கொள்ள 
   மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
   அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழிநான் !


மணவினைகளின் அடுத்த நிகழ்ச்சி மங்கையின் கனவில் ! மொழிகிறாள் கோதை : "அழகைப் பழிக்கும் அழகுடை மங்கையர் கைகளில் ஏந்திய தீபங்களின் கதிரொளி கண்ணைப் பறிக்கிறது ! அவர்கள் சிலர் கைகளில் ஏந்திய கலசங்கள் மங்கள மணத்தை மனங்களில் பரப்புகின்றன ! மதுராபுரியின் மாமன்னன் கண்ணன் வருகைக்குக் காத்து நின்ற மங்கையர் அவன் வந்ததும் கைகளில் ஏந்திய தீபங்களுடனும் கலசங்களுடனும் மணமகனாகிய திருமகனை மங்கள இசை பாடி மனதார வரவேற்கின்றனர் .  மதுரையின் மன்னன் மணமண்டபம் புகும் அழகை என்னென்று கூறுவேன் !  அவனது திருப்பாதுகைகளுக்குத்தான் என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு அழுத்தம் ! பரந்தாமனின் திருவடிகளை ஏந்திய பெருமை அவற்றில் பளிச்சிடுகின்றன ! கண்ணனின் ஏறுபோன்ற நடையினில்தான் எத்தனை கம்பீரம் ! தனது நிலையான திருவடிகளை எடுத்து வைத்து மணமண்டபத்தின் உள்ளே ஒரு ஆண்யானை புகுவதென அவன்  புகுந்தபோது அந்தப் பகுதியே அதிர்ந்தது " என்று மொழிந்தனள் கோதை.  'எங்கும் அதிரப் புகுத' என்ற  அந்த வரிகள்  ஆண்மகனின் நடையின் கம்பீரத்தை  உணர்த்தும் அழகை கவனியுங்கள் !

வாரணமாயிரம் - 6

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத 
முத்துடைத்  தாமம் நிரைதாழ்த்த பந்தற்கீழ் 
மைத்துனன் நம்பி மதுசூதனன்வந்து என்னை 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான் !

கோதையின் கனவு தொடர்கிறது ! மண மண்டபத்தில் 'எங்கும் அதிரப் புகுந்த' மணமகன் கண்ணன் அடுத்து என்ன செய்கிறான் என்பதைப் பாங்குறத் தான் கண்ட கனவாக எடுத்துக் கூறுகிறாள் கோதை !   அழகும் கம்பீரமும் ஒருசேர மண்டபத்தில் மணமகன் கண்ணன் புகுந்த போது, மங்கள வாத்தியங்கள் அனைத்தும் முழங்குகின்றனவாம். மத்தளங்கள் கொட்டுகின்றன. மங்கள இசை பொங்கிப்ரவகிக்கின்றது ! கண்ணனின் பாஞ்சஜன்யத்திற்கிணையாக முழங்குகின்றன வரிசையாக சங்குகள் ! மங்கள ஒலியல்லவா சங்கம் ! முத்துமணிகளால் தாழ்த்தி அலங்கரிக்கப்பட்டுள்ள அற்புதமான பந்தலின் கீழ் தனது தந்தையார் பெரியாழ்வாரின் மடியில்,  அன்றலர்ந்த செந்தாமரை மலராய், அழகு ஜொலிக்க அமர்ந்திருக்கிறாள் மணமகள் கோதை ! அழகின் திருவுருவாய் அங்கு அடியெடுத்து வைக்கிறான் மணமகன் மதுசூதனன்!
அடுத்த கணம் மந்திரங்கள் முழங்க கோதையின் கைத்தலம் பற்றுகிறான் நம்பி ! நனவாகப் போகும் ஒரு கனவின் கதிரொளியில் நனைந்து மகிழ்கிறாள் கோதை! தான் கண்ட கனவின் அபூர்வமான இந்தப் பகுதியையும் தன் தோழியிடம் தவறாமல் எடுத்துரைக்கிறாள் !


 வாரணமாயிரம் - 7

'வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் 
பாசிலை நாணல்படுத்துப் பரிதி வைத்து 
காய்சினமா களிறன்னான் என் கைப்பற்றி 
தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன் தோழிநான் !

கைத்தலம் பற்றிய கண்ணன், அடுத்து தன்னுடன் அக்னி வலம் வந்த திருக்காட்சியை, அந்தக் கனவை,  நனவில் கண்டதுபோல் விவரிக்கிறாள்  கோதை தன் தோழிக்கு. "மெய்யொன்றே பேசும் மறையோர்கள், யாகத்திற்காகத் தீ மூட்டி, பசுமை உணர்ந்த தருப்பைப் புற்களை சுற்றும் வைத்து, 'ஸமித்' என்று சொல்லப்படுகின்ற மரக்குச்சிகளையும் அக்னியில் வைத்து,  மந்திரங்களை ஓதுகின்றனர் ! அந்நேரம் , சற்றே சினமுற்ற ஆண்யானையைப் போன்ற அந்தமிக்க அனந்தன், என் மிருதுவான கைகளை அன்புடன் பற்றிக்கொண்டு, அக்னிகுண்டத்தைச் சுற்றி மெதுவாக வலம் வந்தான் ! அப்படி நாங்கள் தீவலம் வந்த காட்சியை நான் கனவில் கண்டு மகிழ்ந்தேன் தோழி"  என்கிறாள் கோதை !

வாரணமாயிரம் - 8

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் 
நம்மையுடையவன் நாரா யணன்நம்பி 
செம்மையுடைய திருக் கையால் என்தாள்பற்றி 
அம்மிமிதிக்கக் கனாக் கண்டேன் தோழிநான் !

'சப்தபதி' என்று சொல்லக்கூடிய, மந்திரங்கள் சொல்லி அக்னியை மணமகன் மணமகளின் கையைப் பிடித்துக்கொண்டு வலம்வருவதாகப்பட்ட, வைதீகத் திருமணச் சடங்குகளில் மிக முக்கியமான அந்த அம்சம், நடந்து முடிந்ததைத் தன் கனவில் கண்ணாரக் கண்டு மிகிழ்ந்த கோதை, அடுத்த சடங்காகிய அம்மிமிதித்தலையும் அழகுறக் காணுகிறாள் கனவில் !  இந்த சடங்காவது என்னவென்றால் , மணமகன் மணமகளிடம் ' இந்த அம்மிக்கல்லைப் போன்ற திடமுள்ள மனதுடையவளாகவும் , கற்பில் மிகச் சிறந்தவளாகவும் திகழ்கின்ற உன்னை நான் மனதில் வரித்து, ஒரு சங்கல்பமாக,  உன் செந்திருப்பதங்களைப் பிடித்து அம்மிக்கல்லில் வைத்து, நமது வாழ்க்கை வழியில், இது போன்ற கடினமான பாதைகளை ஒருமனதுடன் மனமொன்றி நாம் ஒற்றுமையுடன் கடந்து, வாழ்வாங்கு வாழ்வோம் என்று உறுதியளிக்கிறேன்" என்று கூற மணமகளும் அதற்கு மனமார ஒத்துழைப்பு தருவதாக உறுதி கூறுகிறாள் !   இந்த உறுதிமொழி எடுக்கும் சடங்கு நமது திருமண நிகழ்ச்சிகளின் சாரம் ஆகும். இதனை ஆமோதிக்கும் வகையில், தான் கண்ட கனவை ஆண்டாள் என்று பெயர் பெற்ற கோதை , தனது தோழிக்கு எடுத்துரைக்கிறாள் : "இந்தப் பிறவியிலும்  இன்னும் வரப்போகின்ற ஏழேழ் பிறவிகளிலும் என்றும் நமது காவலனாக இருக்கப்பட்ட பரந்தாமன், நாரயணன், தாமரை மலர் போன்ற தனது சிவந்த அழகிய கைகளால் எனது பாதங்களைப் பற்றி உறுதி மொழிகள் சொல்லி அம்மி மிதிக்க வைத்தாற்போல் நான் கனவு கண்டேன் தோழி " என்கிறாள்.


வாரணமாயிரம் - 9

வரிசிலை வாள்முகத்து  என்னைமார்தாம் வந்திட்டு 
எரிமுகம் பாரித்து என்னைமுன்னே நிறுத்தி 
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து 
பொறிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழிநான் !


அக்னி வலம்வந்து அம்மி மிதித்த நிகழ்ச்சியைக் கனவில் கண்ட கோதை,அதன் தொடர்ச்சியாகப் 'பொறியிடும்' சடங்கையும் கனாக் காண்கிறாள் ! வழக்கம்போல் கண்ட கனவைத் தன தோழியிடம் பகிர்ந்து கொள்கிறாள் ! 'லாஜா ஹோமம்'  என்று வடமொழியில் சொல்லப்படுகின்ற 'பொரியிடுதல்' என்ற சடங்கு யாதெனப் பார்த்தோமானால், இதில் மணமகன் தன் கைமேல் மணமகளின் கைகளை வைத்துக்கொள்ள, மணமகளின் சகோதரன் பொறியை எடுத்து மனமகளின் கைமேல் நிறைத்து வைக்க, அதன் மேல் ஒரு துளி நெய்யை மணமகன் விட்டு, மந்திரங்கள் ஓதி, 'என் மனைவி எனது நீண்ட ஆயுளுக்காக வேண்டுகிறாள்' என்று சொல்லி  அக்னியில் பொறியை  சமர்ப்பிக்கிறான். இது மூன்று முறைகள் அக்னிவலம் வந்து செய்யப்படுகிறது. இனி ஆண்டாள் சொல்வதைக் காண்போம்: "வில்போன்ற புருவங்களை உடைய எனது அண்ணன்மார் வந்திருந்து, என்னை புனிதத் தீமுன்பு நிறுத்தி, அரிமா எனச் சொல்லப்படுகின்ற சிங்கம் போன்ற கம்பீரமும் அழகும் உள்ள முகம் கொண்டவனாகிய அச்சுதனின் கை மேல் என் கைகளை வைத்து, அக்கைகள் நிறையப் பொறியையும்  வைத்துத் தர, மந்திரங்கள் ஓதி அவை அக்னியில் இடப்படுமாறு கனவு கண்டேன் என் தோழி" என்று கூறுகிறாள் !


வாரணமாயிரம் 10

குங்கும மப்பிக் குளிர்சாந்த மட்டித்து 
மங்கல வீதி வலஞ்செய்து மணநீர்  
அங்கவனோடும் உடன்சென்றங் கானைமேல் 
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழிநான் !




பொறியிடும் சடங்கு கழிந்து மற்றும் பல ஹோமங்களும் செய்யப்பட்ட பின் பரந்தாமனும் தானும் திருமஞ்சனமாடிய வைபவத்தையும் கனவில் கண்டாள் கோதை ! இதோ கேளுங்கள் அவள் தன் தோழியிடம் சொல்வதை :
"எங்கள் மேல் குங்குமத்தையும், குளிர்ந்த சந்தனத்தையும் தடவி, திருவீதி வலம் செய்வித்து, அதன் பிறகு நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆனைமேல் பரந்தாமனாகிய ஸ்ரீ ரங்கனுடன் என்னையும் அமரவைத்து, 'திருமஞ்சனமாடல்' என்று சொல்லப்படுகின்ற மங்கள ஸ்நானம் செய்வித்து, நாங்கள் ஊரெங்கும் காண ஊர்வலம் வருவதாகக் கனாக் கண்டேன் தோழி !"

இங்ஙனம் கோதை பக்தி பூர்வரமாகத் தான் பரந்தாமன் மேல் கொண்ட அன்பினால் , அரங்கனால் திருவருள் புரியப்பட்டு , மணவினைகள் அத்தனையையும் கனவில் காணும் வரம் பெற்றதோடன்றி மட்டுமன்றி , நனவிலும் அவை நடைபெறும் பாக்கியம் பெற்றாள் ! இந்தப் பத்துப் பாடல்களையும் படிப்பதனால் கிடைக்கப்பெறும் பலன்களைப் பற்றி நாளை காண்போம் !

பலச்ருதி: 

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை 
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதைசொல் 
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் 
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே !


பலச்ருதி என்பது இதனைச் சொல்வதனால் உண்டாகும் பயனைப் பற்றிக் கூறுவது. 'வாரணமாயிரம்' பாடல்களைப் படிப்பதனால் உண்டாகும் பலன்களைப் பற்றி ஆண்டாளே தன்வரிகளில் கூறியுள்ளது  என்னவென்றால் : " ஆயனாகிய கண்ணனைக் கணவனாகப் பெறவேண்டித் தான் கண்ட கனவினை, ஸ்ரீவில்லிபுத்தூருக்கே   அரசனைப்போல் விளங்கிய பெரியாழ்வார் அவர்களின் புதல்வியாகிய கோதை நவின்ற இந்தத் தூய தமிழ்மாலை பத்து பாக்களையும் பக்தியுடன் படிப்பவர்  நல்ல மக்கட் செல்வத்தை அடைந்து வாழ்வாங்கு வாழ்வார்" என்பதே !


தமிழில் விளக்கம்: கே.பாலாஜி
December 28 2015